ஈரோடு மாவட்டம் அந்தியூரில் உள்ள டாஸ்மாக் பாரின் பின்புறத்தில் நிறுத்தப்பட்டிருந்த கார் மற்றும் ஸ்கூட்டரில் 838 மதுபாட்டில்கள் பதுக்கி வைத்திருந்தது போலீசாருக்கு அதிர்ச்சியளித்தது.
கோபி மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசார் அத்தாணி கைகாட்டி பகுதியில் உள்ள டாஸ்மாக் பாரில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது பின் நின்றிருந்த வாகனங்களில் அதிக அளவில் மதுபாட்டில்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து அங்கிருந்த மூவரை பிடிக்க முயன்ற போது இருவர் தப்பி ஓடிவிட்டனர். ஒருவரை போலீசார் கைது செய்து விசாரித்ததில், அவர் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த டாஸ்மாக் பார் ஊழியர் சிவக்குமார் (45) என தெரியவந்தது.
அவரும் தப்பி ஓடிய இருவரும் சேர்ந்து கோபி பகுதியில் உள்ள மதுக்கடையில் இருந்து மதுபாட்டில்களை மொத்தமாக வாங்கி, கூடுதல் விலைக்கு விற்க திட்டமிட்டிருந்தனர் என்பது விசாரணையில் வெளிச்சத்துக்கு வந்தது.
போலீசார் கைது செய்யப்பட்ட சிவக்குமாரிடம் இருந்து 838 மதுபாட்டில்கள், ரூ.95 ஆயிரம், மற்றும் மதுபாட்டில் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட கார், ஸ்கூட்டர் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
தப்பி ஓடிய சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த சிலம்பரசன் மற்றும் மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த மோசஸ் என்கிற மோகன் ஆகியோரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
