கரூர் சம்பவத்துக்குப் பிறகு தவெக நிர்வாகிகள் தலைமறைவாகிவிட்டதாக வந்த குற்றச்சாட்டுகளை, கட்சியின் இணை பொதுச்செயலாளர் சிடிஆர் நிர்மல் குமார் மறுத்தார். “நாங்கள் எந்த நிகழ்ச்சியிலும் பங்கேற்கவில்லை, ஆனால் தலைமறைவாக இல்லை” என்று அவர் தெளிவுபடுத்தினார்.
சென்னையில் நடைபெற்ற தவெகாவின் முதல் நிர்வாகக் குழுக் கூட்டத்தில் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் ஆதவ் அர்ஜுனா, சிடிஆர் நிர்மல் குமார், ராஜ்மோகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
கரூர் சம்பவத்திற்குப் பிறகு புஸ்ஸி ஆனந்த், நிர்மல் குமார், ராஜ்மோகன் தலைமறைவாக உள்ளதாக சமூக வலைதளங்களில் பல மீம்ஸ்களும் விமர்சனங்களும் எழுந்தன. குறிப்பாக, ராஜ்மோகனை குறித்த பதிவுகள் அதிகம் பகிரப்பட்டன.
அவர்மீது வழக்குகள் பதிவு செய்யப்படவில்லை என்றாலும், ஏன் தலைமறைவாக இருக்கிறார் என்ற கேள்வி எழுந்தது. ஆனால், தற்போது அவர் நிர்வாகக் கூட்டத்தில் பங்கேற்றதால் இது சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியது.

கூட்டத்திற்குப் பிறகு பேசிய ராஜ்மோகன், “கரூர் சம்பவத்துக்குப் பிறகு இரண்டாம் கட்டத் தலைவர்கள் நேரில் சென்று பார்க்க அனுமதி அளிக்கப்படவில்லை. நான் தனியாக திருச்சி நெடுஞ்சாலையில் தங்கி இருந்தேன்” என்றார்.
“அமைதியே உண்மையான நீதி. அவதூறு, விமர்சனங்களை தாண்டி மக்களுக்கு நீதி நிலைநாட்டும் பாதையில் நாங்கள் செல்வோம். அமைதிப் பாதையே எங்களின் அரசியல் பாதை” என்று ராஜ்மோகன் உறுதியுடன் தெரிவித்தார்.
