ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு முக்கிய மாற்றம் நவம்பர் 1 முதல் அமலுக்கு வருகிறது. இனி பெயர், முகவரி, பிறந்த தேதி, மொபைல் எண் போன்ற விவரங்களை திருத்த ஆதார் மையத்துக்கு செல்ல தேவையில்லை. வீட்டிலிருந்தே ஆன்லைனில் எளிதாக மாற்றம் செய்யலாம் என UIDAI அறிவித்துள்ளது.
2009ஆம் ஆண்டு அறிமுகமான ஆதார் திட்டம் தற்போது வங்கி, பாஸ்போர்ட், நலத்திட்டங்கள், மொபைல் சிம் உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் அவசியமாகப் பயன்படுத்தப்படுகிறது. இதனால் ஆதார் தகவல்களின் துல்லியம் மிக முக்கியமானதாகிறது.
UIDAI புதிய ஆன்லைன் சேவையில், பதிவேற்றப்படும் ஆவணங்கள் தானாகவே சரிபார்க்கப்படும். இதனால் தவறான தகவல்கள் பதிவாகும் அபாயம் குறையும். புதிய முறை பாதுகாப்பாகவும் வேகமாகவும் செயல்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஆதார் திருத்தத்துக்கான கட்டணங்களும் மாற்றப்பட்டுள்ளன. பெயர், முகவரி, மொபைல் எண் மாற்றம் ரூ.75, பயோமெட்ரிக் திருத்தம் ரூ.125. குழந்தைகளுக்கான புதுப்பிப்பு இலவசம். மேலும், 2026 ஜூன் 14 வரை ஆன்லைனில் ஆவணங்களை இலவசமாக புதுப்பிக்கலாம்.

வீட்டிலிருந்தே சேவை பெறும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளதுடன், இதற்காக முதல் நபருக்கு ரூ.700, அதே முகவரியில் உள்ள பிறருக்கு ரூ.350 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது முதியோர் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு பெரும் உதவியாக இருக்கும்.
அதேசமயம், பான் மற்றும் ஆதார் இணைப்பும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. 2026 ஜனவரி 1க்கு முன் இணைக்காதவர்களின் பான் கார்டு செயலிழக்கும். புதிய விதிமுறைகள் மக்களுக்கு வசதியையும் பாதுகாப்பையும் வழங்கும் என UIDAI தெரிவித்துள்ளது.
