டெல்லி செங்கோட்டை அருகே நடந்த கார் வெடிப்பு சம்பவம் குறித்து புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. சம்பவத்தை நிகழ்த்தியதாக சந்தேகிக்கப்படும் டாக்டர் உமர், பதற்றத்தில் தவறு செய்திருக்கலாம் என முதற்கட்ட புலனாய்வில் தெரியவந்துள்ளது.
ஹரியானா மாநிலம் பரிதாபாத்தில் உமரின் கூட்டாளிகள் கைது செய்யப்பட்டதுடன், 2,900 கிலோ வெடிபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதன் பின்னர், போலீசார் தம்மை அடையாளம் காணலாம் என்ற அச்சத்தில் உமர் வெடிபொருட்களை வேறு இடத்துக்கு மாற்ற முயன்றதாக கூறப்படுகிறது.
அந்த முயற்சியின் போது, டெல்லி நகரில் போக்குவரத்து நெரிசலில் சிக்கிய ஐ20 கார் மெதுவாக நகர்ந்தது. இதனால் கார் உள்ளே இருந்த வெடிபொருள் தானாக வெடித்திருக்கலாம் என்றும் புலனாய்வாளர்கள் சந்தேகிக்கின்றனர்.
மேலும், டாக்டர் உமர் கடந்த 3 நாட்களாக தனது செல்போனை ஸ்விட்ச் ஆஃப் நிலையில் வைத்திருந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. இது அவரின் திட்டமிட்ட நடவடிக்கையாக இருக்கலாம் என அதிகாரிகள் கூறுகின்றனர்.
தற்போது, உமரின் தொடர்புகள், அவரது பயண பாதை, மற்றும் வெடிபொருட்கள் எங்கிருந்து வந்தது என்பதற்கான விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்த புதிய தகவல்கள் டெல்லி கார் வெடிப்பு வழக்கில் பல மர்மங்களை வெளிச்சம் போடக்கூடும் என புலனாய்வாளர்கள் நம்புகின்றனர்.
