தமிழகம், கேரளா, கர்நாடகா மற்றும் புதுச்சேரி இடையே இயக்கப்பட்டு வந்த 600-க்கும் மேற்பட்ட ஆம்னி பேருந்துகள் இன்று (திங்கட்கிழமை) மாலை முதல் இயக்கப்படாது என்று ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கங்கள் அறிவித்துள்ளன. தமிழகத்திற்குள் மட்டுமே பஸ்கள் வழக்கம்போல இயக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.
கேரள போக்குவரத்து துறை, தமிழகத்தில் பதிவு செய்யப்பட்ட 30-க்கும் மேற்பட்ட ஆம்னி பஸ்களை சாலைவரி கட்டாததால் சிறைப்பிடித்து ரூ.70 லட்சத்துக்கும் மேல் அபராதம் விதித்துள்ளது. இதேபோன்று, கர்நாடக துறையும் கடந்த வாரம் தமிழக பஸ்களுக்கு ரூ.1.15 கோடி வரை அபராதம் வசூலித்துள்ளது.
இந்நிலையில், இரட்டை சாலைவரி மற்றும் அதிக அபராதத்தால் ஆபரேட்டர்கள் கடும் நெருக்கடியில் உள்ளனர். “ஆல் இந்தியா டூரிஸ்ட் பெர்மிட்” விதிப்படி தமிழ்நாடு இன்னும் வெளிமாநில பஸ்களிடமிருந்து சாலைவரி வசூலிப்பதால், அண்டை மாநிலங்களும் அதேபோல் அபராதம் விதிக்கின்றன என கூறப்படுகிறது.
இந்த பிரச்சனையால் கேரளா மற்றும் கர்நாடகா திசையில் இயக்கப்படும் பல ஆம்னி பஸ்கள் ஏற்கனவே நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் சபரிமலை செல்லும் தமிழக பக்தர்களுக்கும் பெரும் சிரமம் ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.
பேருந்து உரிமையாளர்கள் கூறுகையில், ஒவ்வொரு பஸுக்கும் காலாண்டுக்கு சுமார் ரூ.4.50 லட்சம் வரி செலுத்த வேண்டியிருப்பதால், இயக்கம் சாத்தியமில்லாததாகி விட்டது என தெரிவித்துள்ளனர்.
இதனை தீர்க்க தமிழக முதல்வர் நேரடியாக தலையிட்டு, அண்டை மாநிலங்களுடன் பேசி சாலைவரியில் விலக்கு அளித்து பேருந்து சேவையை வழமைக்கு கொண்டு வர வேண்டும் என சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
