திருச்சியில் காவலர் குடியிருப்பில் நடந்த கொலை சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரியல் எஸ்டேட் முகவராக பணியாற்றி வந்த தாமரைச் செல்வன் என்ற இளைஞர் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார்.
தகவலின்படி, தாமரைச் செல்வனுக்கும் எசனக்கோரை கிராமத்தைச் சேர்ந்த சதீஷ் என்பவருக்கும் கமிஷன் தொடர்பாக சில நாட்களுக்கு முன்பு தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அப்போது தாமரைச் செல்வன், சதீஷை அடித்து அவமானப்படுத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதனால் ஆத்திரமடைந்த சதீஷ், தனது நண்பர்களுடன் சேர்ந்து தாமரைச் செல்வன் பைக்கில் சென்று கொண்டிருந்தபோது அவரை இடித்துக் கீழே தள்ளி தாக்கியதாக கூறப்படுகிறது.
உயிர் பிழைக்க தாமரைச் செல்வன் அருகிலிருந்த காவலர் குடியிருப்புக்குள் ஓடிச் சென்றார். ஆனால் கும்பல் அங்கு பின்தொடர்ந்து சென்று அவரை வெட்டிக் கொன்றது.
காவலர் குடியிருப்பில் நடந்த இந்த சம்பவம் போலீசாரை அதிர்ச்சியடையச் செய்தது. சத்தம் கேட்ட காவலர்கள் விரைந்து வந்து நடவடிக்கை மேற்கொண்டனர்.
இந்நிலையில், கொலையில் ஈடுபட்ட இளமாறன் என்பவர் சம்பவ இடத்திலேயே பிடிபட்டார். தப்பி ஓடிய மற்ற நான்கு பேரையும் போலீசார் சில மணி நேரங்களில் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
