கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே உள்ள பெண்கள் விடுதியில் ரகசிய கேமரா பொருத்தப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வை ஏற்படுத்தியது. விடுதியில் வசிக்கும் மாணவிகள் புகார் அளித்ததைத் தொடர்ந்து போலீசார் விசாரணையில் இறங்கினர்.
இந்த வழக்கில் முக்கிய குற்றவாளி என அடையாளம் காணப்பட்ட ரவி பிரதாப் சிங், கடந்த சில நாட்களாக தப்பித்து வந்தார். அவரை டெல்லியில் வைத்து தனிப்படையினர் கைது செய்துள்ளதாக கிருஷ்ணகிரி எஸ்.பி தங்கதுரை தெரிவித்துள்ளார்.
கைது செய்யப்பட்ட ரவி பிரதாப் சிங் மீது தகவல் தொழில்நுட்ப சட்டம் மற்றும் பெண்கள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
விடுதியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும், மாணவிகளுக்கு பாதுகாப்பு அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக எஸ்.பி தெரிவித்தார்.
முதற்கட்ட விசாரணையில், ரகசிய கேமராவால் எடுக்கப்பட்ட வீடியோக்கள் இதுவரை சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்யப்படவில்லை என தெரியவந்துள்ளது.
இந்த சம்பவம் குறித்து கிருஷ்ணகிரி மாவட்டம் முழுவதும் கடும் கண்டனம் எழுந்துள்ளது. பெண்கள் விடுதிகளில் பாதுகாப்பு சோதனைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
