மாதம்பட்டி ரங்கராஜ் மீது ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிஸில்டா அளித்த புகாரை தொடர்ந்து மகளிர் ஆணையத்தில் விசாரணை நடைபெற்றது. இதில் ரங்கராஜ், ஜாய் கிரிஸில்டாவை இரண்டாவது திருமணம் செய்ததையும், அவருக்கு பிறந்த குழந்தை தன்னுடையதென்றும் ஒப்புக்கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ரகசியமாக நடைபெற்றதாக கூறப்படும் இந்த இரண்டாவது திருமணத்தின் புகைப்படங்களை கிரிஸில்டா சமூக வலைதளங்களில் வெளியிட்டு ரங்கராஜ் தன்னை ஏமாற்றினார் என குற்றம் சாட்டினார். அதனை அடுத்து காவல் துறையிலும் புகார் அளித்திருந்தார்.
விசாரணை நேரத்தில் கிரிஸில்டா, ரங்கராஜுடன் இருந்த பேச்சு பதிவுகள் மற்றும் புகைப்படங்களை ஆதாரமாக சமர்ப்பித்தார். முதலில் அமைதியாக இருந்த ரங்கராஜ் பின்னர் சட்டத்தின் முன் இந்த பிரச்சனைக்கு பதில் அளிப்பேன் என தெரிவித்தார்.
இதற்கிடையே கிரிஸில்டாவுக்கு ஆண் குழந்தை பிறந்த நிலையில், பராமரிப்பு செலவிற்காக ரங்கராஜ் மாதம் ஆறரை லட்சம் ரூபாய் வழங்க வேண்டும் என நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
மகளிர் ஆணையம் வெளியிட்ட அறிக்கையில், ரங்கராஜ் குழந்தை தன்னுடையதென்று ஒப்புக்கொண்டதால் டிஎன்ஏ பரிசோதனை தேவையில்லை என்றும், குழந்தையை பராமரிக்கும் பொறுப்பு அவருக்கே உண்டு எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த ஒப்புதலுக்குப்பின் ரங்கராஜ் கைது செய்யலாம் என மகளிர் ஆணையம் காவல்துறைக்கு பரிந்துரைத்திருப்பது தகவல். இதன் மூலம் ரங்கராஜ் மீது சட்ட சிக்கல் தீவிரமாகும் சூழல் உருவாகியுள்ளது.
