கரூரில் நடந்த கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பான விசாரணையை சிபிஐ தீவிரப்படுத்தியுள்ளது. 41 பேரின் உயிரை காவுகொண்ட இந்த விபத்து நாட்டையே அதிர வைத்தது.
உச்ச நீதிமன்ற உத்தரவின் பேரில் ஓய்வு பெற்ற நீதிபதி கண்காணிப்பில் சிபிஐ விசாரணை நடைபெற்று வருகிறது. கடந்த செப்டம்பர் 27 அன்று தவெக தலைவர் விஜய் கரூரில் நடத்திய பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில்தான் துயரம் நிகழ்ந்தது.
இந்த வழக்கில் சிபிஐ அதிகாரிகள் மீண்டும் கரூருக்கு திரும்பி, சம்பவத்துடன் தொடர்புடைய ஆவணங்களை ஆய்வு செய்துள்ளனர். கரூர் டவுன் இன்ஸ்பெக்டர் மணிவண்ணனிடம் நேற்று ஒரு மணி நேரம் விசாரணை நடைபெற்றது.
பின்னர் சம்பவ இடமான வேலுசாமிபுரத்திற்கு சென்று சிபிஐ குழு நேரடி ஆய்வு மேற்கொண்டது. 3டி லேசர் ஸ்கேனர் உள்ளிட்ட நவீன கருவிகளின் உதவியால் அங்கிருந்த சூழல் மற்றும் கூட்ட நெரிசல் நிலைமை ஆய்வு செய்யப்பட்டது.
சாட்சியர்களை நேரில் அழைத்து விசாரணை நடத்தும் பணியும் நடைப்பெறுகிறது. வேலுசாமிபுரம் பகுதி கடைதாரர்கள் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் என நான்கு பேர் இன்று விசாரணைக்கு ஆஜரானனர்.
இந்நிலையில் பலருக்கும் சிபிஐ சம்மன் அனுப்பி விளக்கமளிக்க அழைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சம்பவத்தின் உண்மை காரணங்கள் மற்றும் பொறுப்பாளர்கள் குறித்து விரைவில் முடிவு வரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
