ரஞ்சி டிராபி தொடரில் சண்டிகர் அணிக்கு எதிராக மகாராஷ்டிரா வீரர் பிரித்வி ஷா அபாரமான ஆட்டம் வெளிப்படுத்தி இரட்டைச் சதம் அடித்து சாதனை படைத்தார். இருப்பினும், போட்டியின் ஆட்ட நாயகன் விருது சிஎஸ்கே கேப்டனும் மகாராஷ்டிரா அணியின் தலைவருமான ருதுராஜ் கெய்க்வாட்டிற்கு வழங்கப்பட்டது.
பிரித்வி ஷா இரண்டாவது இன்னிங்ஸில் வெறும் 141 பந்துகளில் இரட்டைச் சதம் அடித்து, ரஞ்சி டிராபி வரலாற்றில் இரண்டாவது அதிவேக இரட்டைச் சதம் எனும் பெருமையை பெற்றார். அவர் மொத்தமாக 222 ரன்கள் குவித்து அணியின் வெற்றிக்கு முக்கிய பங்கு ஆற்றினார்.
இருப்பினும், முதல் இன்னிங்ஸில் 116 ரன்கள் அடித்த ருதுராஜ் கெய்க்வாட் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார். போட்டியின் முடிவில் அவர் எடுத்த ரன்கள் அணிக்கு முன்னிலை பெற்றுத் தந்ததால், அவருக்கு விருது வழங்கப்பட்டது.
விருதைப் பெற்றுக்கொண்ட ருதுராஜ், அதனை பிரித்வி ஷாவுடன் பகிர்ந்து ரசிகர்களின் மனதை வென்றார். “உண்மையான கேப்டன்” என ரசிகர்கள் பாராட்டிய ருதுராஜின் இந்த செயல் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்கம் தனது பதிவில், “பகிரப்பட்ட பெருமை, உண்மையான விளையாட்டு உணர்வு. ருதுராஜ் தனது ஆட்ட நாயகன் விருதை பிரித்வி ஷாவுடன் பகிர்ந்தார்” என தெரிவித்துள்ளது. இருவரின் புகைப்படம் தற்போது பரவலாக பகிரப்படுகிறது.
மும்பை அணியை விட்டு மகாராஷ்டிரா அணிக்காக விளையாடும் பிரித்வி ஷா, மீண்டும் ஃபார்மில் திரும்பியுள்ளார். IPL 2025 ஏலத்தில் எந்த அணியாலும் தேர்வு செய்யப்படாத நிலையில், இந்த இரட்டைச் சதம் அவரது கிரிக்கெட் வாழ்க்கைக்கு புதிய துவக்கமாகக் கருதப்படுகிறது.
