Home » நான் உங்களோடு இருக்கேன் – கண்ணீருடன் நின்ற விஜய்!

நான் உங்களோடு இருக்கேன் – கண்ணீருடன் நின்ற விஜய்!

TVK leader Vijay meets families of Karur

கரூரில் நடைபெற்ற கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் இன்று நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். மாமல்லபுரம் ஃபோர் பாயிண்ட்ஸ் ரிசார்ட்டில் நடைபெற்ற இந்த நிகழ்வில், 37 குடும்பங்களை சேர்ந்த 235 பேர் பங்கேற்றனர். ஒவ்வொரு அறையிலும் தனித்தனியாக சென்று, உயிரிழந்தவர்களின் புகைப்படங்களுக்கு மலரஞ்சலி செலுத்திய விஜய், அவர்களின் குடும்பத்தினரை ஆற்றுப்படுத்தினார்.

விஜய், பாதிக்கப்பட்ட குடும்பங்களின் தொழில், சொந்த வீடு, கடன் பிரச்சனை, குழந்தைகளின் கல்வி உள்ளிட்ட விவரங்களை எழுத்துப்பூர்வமாக பெற்று வருகிறார். மேலும், தேவையான இடங்களில் கூடுதல் நிதியுதவி, மருத்துவம் மற்றும் வேலை வாய்ப்பு போன்ற உதவிகளையும் வழங்குவதாக உறுதி அளித்துள்ளார்.

சந்திப்பு நிகழ்வில் எந்தக் கட்சி நிர்வாகிகளும் இல்லாமல் விஜய் தனியாகவே குடும்பங்களை சந்தித்தது குறிப்பிடத்தக்கது. பாதிக்கப்பட்டவர்களுக்கு தேநீர் வழங்கி உபசரித்ததும், மனிதநேயத்துடன் நடந்துகொண்டதுமாக நிகழ்ச்சி அமைந்தது. குடும்பத்தினரிடையே உணர்ச்சிபூர்வமான தருணங்கள் உருவானது.

கரூரில் கடந்த மாதம் 27ஆம் தேதி நடைபெற்ற தவெக கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர். அதனைத் தொடர்ந்து, ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.20 லட்சம் நிவாரண உதவியும், காயம் அடைந்தவர்களுக்கு ரூ.2 லட்சமும் வழங்கப்படும் என விஜய் அறிவித்திருந்தார். அந்த தொகைகள் அண்மையில் சம்பந்தப்பட்டவர்களின் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டுள்ளன.

முன்னதாக வீடியோ கால் மூலம் ஆறுதல் தெரிவித்த விஜய், “விரைவில் நேரில் சந்திப்பேன்” என உறுதி அளித்திருந்தார். அதன் பேரில் இன்றைய சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டது. கரூரில் மண்டபம் கிடைக்காததால், சென்னைக்கு அழைத்து வந்து சந்திக்கும் வகையில் தவெக சார்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

இந்நிகழ்வு முழுவதும் அமைதியான சூழலில் நடைபெற்றது. உயிரிழந்தோரின் குடும்பத்தினரின் கோரிக்கைகள் குறித்து விஜய் நேரடியாக அறிந்து, விரைவில் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என உறுதியளித்துள்ளார்.

Also Read  எண்ணூர் கடற்கரையில் 4 மாணவிகள் நீரில் மூழ்கி சாவு