தமிழ் திரைப்பட உலகில் பாடலாசிரியராகவும், பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மக்களிடையே பிரபலமானவராகவும் விளங்கும் கவிஞர் சினேகனின் தந்தை சிவசங்கு (வயது 101) இன்று அதிகாலை காலமானார்.
சமூக வலைதளத்தில் தனது தந்தையின் மறைவை உறுதிப்படுத்திய சினேகன், “என் தந்தை சிவசங்கு இன்று அதிகாலை 4.30 மணிக்கு இயற்கை எய்தினார்” என்று உணர்ச்சிபூர்வமாக பதிவு செய்துள்ளார்.
“புத்தம் புது பூவே” திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பாடலாசிரியராக அறிமுகமான சினேகன், இதுவரை 2500க்கும் மேற்பட்ட பாடல்களை எழுதி ரசிகர்களின் இதயத்தை வென்றுள்ளார்.
பாடலாசிரியராக மட்டுமல்லாது, நடிகர், கவிஞர் மற்றும் அரசியல்வாதி என பல்துறை திறமையுடன் திகழும் அவர், பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பெரும் வரவேற்பைப் பெற்றார்.

நடிகை கன்னிகா ரவியை காதலித்து திருமணம் செய்துகொண்ட சினேகனுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். தந்தையின் மரணத்தால் குடும்பம் முழுவதும் ஆழ்ந்த துயரத்தில் மூழ்கியுள்ளது.
சினேகனின் தந்தை சிவசங்குவின் நல்லடக்கம் நாளை காலை 11 மணிக்கு அவரது சொந்த ஊரான தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள புதுக்கரியப்பட்டியில் நடைபெறவுள்ளதாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

 
			 
			