ஓய்வு பெற்ற அரசு அதிகாரியிடம் “உங்களை டிஜிட்டல் கைது செய்துள்ளோம்” என்று மிரட்டி, 29.45 லட்சம் ரூபாய் மோசடி செய்த கும்பல் மூவர் கோவையில் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை மாநகராட்சியில் தலைமை பொறியாளராக பணியாற்றி ஓய்வு பெற்ற நடராஜன் (61) கோவை மசக்காளிபாளையத்தில் வசித்து வருகிறார். சமீபத்தில் அவரின் மொபைல் எண்ணிற்கு மர்ம நபர் ஒருவர் அழைப்பு செய்து, “உங்கள் வங்கிக் கணக்கில் மோசடி பரிவர்த்தனை நடந்துள்ளது, எனவே உங்களை டிஜிட்டல் கைது செய்துள்ளோம்” என்று கூறி பயமுறுத்தியுள்ளார்.
அதனால் பதற்றமடைந்த நடராஜன், தன் மீது குற்றமில்லை என கூறினாலும், குற்றவாளிகள் “உங்கள் கணக்கில் உள்ள பணத்தை சரிபார்க்க தனியார் வங்கிக் கணக்கிற்கு அனுப்புங்கள்” என கூறி ஏமாற்றினர். இதை நம்பிய நடராஜன், தன் ஓய்வூதிய சேமிப்பாக இருந்த ரூ.29 லட்சத்து 88 ஆயிரம் பணத்தை அவர்கள் கூறிய கணக்கிற்கு அனுப்பியுள்ளார்.

பணம் திரும்ப வராததால் சந்தேகமடைந்த நடராஜன் மீண்டும் அந்த எண்ணிற்கு அழைத்தபோது, அது ஸ்விட்ச் ஆஃப் ஆனது. உடனே அவர் கோவை சைபர் கிரைம் பிரிவில் புகார் அளித்தார்.
விசாரணையில், கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தை சேர்ந்த நபீல், ஹாரிஷ், ரமீஸ் ஆகிய மூவர் இந்த மோசடியில் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது. போலீசார் அவர்களை கைது செய்து, ரூ.6 லட்சம் பணத்தை மீட்டுள்ளனர்.
தற்போது கைதான மூவரும் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும், அவர்கள் இதே போல இன்னும் பலரிடமிருந்து மோசடி செய்துள்ளனரா என போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
