வங்கக்கடலில் உருவான மொந்தா புயல் நாளை (செவ்வாய்க்கிழமை) ஆந்திராவில் கரையை கடக்கவுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் தாக்கத்தால் தமிழகத்தின் வடக்குக் கடலோர பகுதிகளில் கனமழை பெய்யும் வாய்ப்பு அதிகம் உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
மொந்தா புயல் தற்போது வங்கக்கடலின் மேற்குப் பகுதியில் நிலவுகிறது. நாளை காலை ஆந்திரா மாநிலம் மச்சிலிபட்டணம் அருகே கரையை கடக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதன் விளைவாக தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் தமிழ்நாடு கடலோர பகுதிகளில் காற்றின் வேகம் 50 முதல் 60 கி.மீ. வரை வீசக்கூடும் என்று வானிலை மையம் எச்சரித்துள்ளது.
இந்த சூழ்நிலையில், சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்ட அறிக்கையில், சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் வழங்கப்பட்டுள்ளது. இந்த மாவட்டங்களில் சில இடங்களில் கனமழையுடன் மிகக் கனமழையும் பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே நேரத்தில், வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை வழங்கப்பட்டுள்ளது. இம்மாவட்டங்களில் மிதமானது முதல் கனமழை வரை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.

மழை தீவிரம் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளதால், குடியிருப்போர் அவசியமில்லாமல் வெளியே செல்ல வேண்டாம் என்றும், கடலோர மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாமெனவும் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். புயல் கரையை கடக்கும் நேரத்தில் காற்று வேகம் மேலும் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.
வங்கக்கடலில் உருவாகியுள்ள மொந்தா புயல் நாளை கரையை கடந்து விட்டாலும், அதன் பின்விளைவுகள் காரணமாக தமிழ்நாட்டின் வடக்குப் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரம் வரை மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
