தங்கம் விலை கடந்த சில வாரங்களாக வேகமாக உயர்ந்து வந்த நிலையில் தற்போது சற்று மந்தமடைந்துள்ளது. இன்று ஞாயிற்றுக்கிழமை மார்க்கெட் விடுமுறை என்பதால் நேற்றைய விலையிலேயே தங்கம் விற்பனை நடைபெற்று வருகிறது.
அக்டோபர் தொடக்கத்தில் ஒரு சவரன் ரூ.1 லட்சத்தை நெருங்கிய தங்கம், அக்டோபர் 24 அன்று ரூ.91,200 ஆக சரிந்தது. ஆனால் மறுநாள் மீண்டும் ரூ.92,000 ஆக உயர்ந்தது.
சர்வதேச பொருளாதார சூழ்நிலைகளால் தங்கம் விலை மாறுபடுவதாக வியாபாரிகள் கூறுகின்றனர். சென்னை தங்கம் வியாபாரிகள் சங்கத் தலைவர் ஜெயந்திலால் ஷலானி கூறியதாவது: “இது தற்காலிக இடைநிலை மட்டுமே; தங்கம் விரைவில் உயரும். ஒரு அவுன்ஸ் தங்கம் $4,100 ஆக உள்ளது, இது $4,800 வரை செல்லலாம்” என்றார்.

அவரும் மேலும் கூறியதாவது: “ஒரு சவரன் தங்கம் ரூ.90,000க்கு கீழே குறைய வாய்ப்பே இல்லை. அமெரிக்காவின் பெடரல் வங்கி வட்டிவிகிதத்தை நவம்பர் மாதத்தில் குறைத்தால், முதலீட்டாளர்கள் அங்கிருந்து பணத்தை எடுத்து தங்கத்தில் முதலீடு செய்வார்கள். இதனால் தங்கத் தேவை மேலும் அதிகரிக்கும்,” எனவும் கூறினார்.
தங்கம் குறுகிய கால முதலீட்டிற்கு ஏற்றதல்ல என்றும், நீண்டகால முதலீடாகவே பார்க்கப்பட வேண்டும் என்றும் வியாபாரிகள் அறிவுறுத்துகின்றனர். தற்போதைய விலையில் தங்கம் வாங்குபவர்களுக்கு பாதிப்பு ஏற்படாது என்றும், வருங்காலத்தில் தங்கத்தின் விலை மேலும் உயரும் வாய்ப்பு மிகுந்தது என்றும் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
