Home » சென்னையில் இன்று மழை வெள்ளம்! வானிலை மையம் எச்சரிக்கை

சென்னையில் இன்று மழை வெள்ளம்! வானிலை மையம் எச்சரிக்கை

Rain and floods in Chennai today

அக்டோபர் 26: தமிழ்நாட்டில் இன்று சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, விழுப்புரம் மாவட்டங்களிலும் புதுச்சேரியிலும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தென்கிழக்கு வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்று ஆழ்ந்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது. இது தற்போது போர்ட் ப்ளேயரிலிருந்து மேற்கு-தென்மேற்கே சுமார் 440 கிலோமீட்டர் தொலைவில், விசாகபட்டினத்திலிருந்து தென்கிழக்கே 970 கிமீ தொலைவில், சென்னையிலிருந்து கிழக்கு-தென்கிழக்கே 970 கிமீ தொலைவில் அமைந்துள்ளது.

இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக, இன்று தமிழ்நாட்டில் 6 மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் கனமழை பெய்யக்கூடும் என வானிலை மையம் அறிவித்துள்ளது. மேலும் நாளை சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செங்கல்பட்டு, காஞ்சிபுரம், வேலூர், விழுப்புரம் மற்றும் புதுச்சேரி பகுதிகளிலும் நாளை கனமழை பெய்யக்கூடும். அதேசமயம், 28-ஆம் தேதி தமிழ்நாட்டின் சில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.

29 முதல் 31 அக்டோபர் வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்யும் வாய்ப்பு உள்ளது. மத்திய மற்றும் வடமேற்கு வங்கக்கடலில் மணிக்கு 100 கிமீ வேகத்தில் சூறைக்காற்று வீசக்கூடும் என்பதால், மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் இன்று வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான அல்லது கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 29–30° செல்சியஸ், குறைந்தபட்சம் 24° செல்சியஸாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Also Read  காவலர் குடியிருப்பில் கொடூரம் – இளைஞர் வெட்டிக்கொலை!